Loading...
தமிழகம் முழுவதும் திட்டப்பணிகள் முடக்கம் - எடப்பாடி கே. பழனிசாமி குற்றசாட்டு
Post image

ஆளும் தி.மு.க.வினர் கமிஷன் கேட்கிறார்கள். தமிழகம் முழுவதும் இன்றைக்கு திட்டப்பணிகள் முடங்கி இருக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி :- சென்னையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள். அரசின் பணிகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. பதில் :- அரசின் பணியை பொறுத்தவரைக்கும் இந்த ஆட்சி அமைத்ததில் இருந்து இன்று வரைக்கும் மெத்தனமாகதான் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோருக்குமே தெரியும். கழக அரசு கொண்டு வந்த நிறைவேற்றிய பணியைத்தான், இன்றைக்கு அவர்கள் திறந்து வைத்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசு அமைந்த பிறகு ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து அந்தப்பணிகள் நடைபெறுகிறதா என்று சொன்னால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கழக ஆட்சியில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நிறைவுபெற்று அதை திறந்து வைக்கிறார்கள். கழக ஆட்சியில் சட்டக்கல்லூரிகளை கொண்டு வந்து அதை கட்டி முடிக்கும் தருவாயில் இருப்பது எல்லாம் அதை திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல்வேறு பணிகள் கழக ஆட்சியில் கொண்டு வந்த பணிகளை எல்லாம் முடிவற்றதை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் தற்பொழுது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன பாலங்கள், சாலைகள், புறவழி சாலைகள் இவை எல்லாம் முடிவுற்ற பணி கழக அரசு இருக்கும்பொழுது கொண்டு வந்தவைகள். கேள்வி :- மாநகராட்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனரே? பதில் :- கிடையாது, நான் ஏற்கனவே பொதுக்கூட்டங்களிலும், ஊடகங்களிலும் சொல்லி உள்ளேன். கோயம்புத்தூரில் பார்த்தீர்களென்றால் 133 வேலைகள், கிட்டத்தட்ட 11 முறை அறிவிக்கப்பட்டு அந்த ஒப்பந்தங்களை வைத்துள்ளார்கள். சுமார் ரூபாய் 48 கோடியில் 133 பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு 11 முறை தள்ளி வைத்துள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் அவர்கள் கமிஷன் அதிகமாக கேட்பதால் எந்த ஒப்பந்ததாரரும் பணி எடுக்க முன் வரவில்லை, அதேபோல தமிழகம் முழுவதும் இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் வரைக்கும், கிராமம் வரைக்கும் பணிகள் எல்லாம் முடங்கி உள்ளன. இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

Top