Loading...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சூளுரை
Post image

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சரித்திர சாதனை படைக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சிகளில் இருந்து 1300க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்த நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- தொண்டர்களும், நிர்வாகிகளும் கடின உழைப்பால் சிந்தாமல் சிதறாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முழுவடிவம் பெற்று இன்றைக்கு தமிழகத்திலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை கண்டால் மற்ற கட்சிகள் அஞ்சுகின்ற நிலையை பார்க்கிறோம். இருபெரும் தலைவர்கள் மறைவுக்குப்பிறகு இந்த கட்சி வலிமையாக இருப்பதற்கு காரணமே மக்களுடைய பெரும் ஆதரவு. நிர்வாகிகளும், தொண்டர்களின் உழைப்பு. அதனால் தான் இன்றைக்கு கட்சியை எவராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனையோ பேர் இந்த கட்சியை உடைக்க பார்த்தார்கள். இறக்கப் பார்த்தார்கள், முடக்கப் பார்த்தார்கள் ஏன் தற்பொழுது ஆளுகின்ற முதலமைச்சர் எத்தனையோ அவதாரமெடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்க பார்த்தார். அத்தனை அவதாரத்தையும் தவிடுபொடியாக்கிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இங்கே அமர்ந்து இருப்பவர்கள் அனைவரும் மிட்டா மிராசுதாரர்கள் அல்ல. அன்றாடம் உழைத்து வாழக்கூடிய மக்கள் தான் கழகத்தில் இருக்கின்றார்கள். தி.மு.க.வினரோ, மற்ற கட்சியினர் பணம் படைத்தவர், மிட்டாமிராசுதாரர்கள் தான் அக்கட்சிகளில் ஏராளமானவர்கள் இருப்பார்கள். அவர்களை வளம் ஆக்குவதற்காக அந்தக் கட்சியை பயன்படுத்துவார்கள். ஆனால் கழகத்தை பொறுத்தவரைக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்திற்காக நம்முடைய நிர்வாகிகள், தொண்டர்கள் உழைப்பார்கள். அதுதான் கழகம் இன்றைக்கும் நிலைத்து இருக்கிறது. இப்போது கழகத்தில் இணைய உள்ளவர்களை பார்க்கின்றோமே உழைப்பாளிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலே இணைத்துக்கொள்வதற்கு வருகை தந்து முகமலர்ச்சியோடு அமர்ந்துள்ளீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று சொல்வார்கள், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள், அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவதற்கு இங்கே கழகத்தில் இணைய உள்ள நம்முடைய நிர்வாகிகள் மூலம் இணைக்கப்பட உள்ளனர். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இணைத்துக்கொள்ள மனமுவந்து அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே ஸ்டாலினே அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு இருப்பதாக ஊடகமும், பத்திரிகைகளும் தெரிவித்து கொண்டிருக்கின்றன. நாட்டு மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் இப்போது ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களுடைய எண்ணமெல்லாம் இந்த ஆட்சி எப்பொழுது போகும் என்று யாரை கேட்டாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். கிராமத்தில் பணிபுரிகின்ற தொழிலாளிகள் முதல், நகரத்தில் பணிபுரிகின்ற தொழிலாளி வரை, நடுநிலையோடு இருக்கின்ற மக்களும், அரசு ஊழியர்களும் தி.மு.க. ஆட்சியை எப்பொழுது வீட்டுக்கு அனுப்புவோம் என்று காத்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி 40 இடங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் அமைக்கின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும், சரித்திர சாதனை படைக்கும் இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Top